பிளாஸ்டிக் பைகளை தடுக்க சட்டம்: ராமதாஸ்!

புதன், 6 பிப்ரவரி 2008 (09:36 IST)
எண்ணற்ற தீமைகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்' என்று பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதாஸ் வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி இரயில் நிலையத்துக்கு வந்து இறங்கிய போது, தண்டவாளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் காணப்பட்டன. இ‌‌ங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலுமே பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்து கிடக்கும் காட்சியை காணமுடியும். தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கைப்பைகள் பல ஆண்டுகள் அழிந்து போகாமல் சுற்று சூழலை கெடுக்கின்றன.

பிளாஸ்டிக் பைகளால் நோய்களை பரப்பு பூச்சிகள் பெருகுகின்றன. அவற்றை உண்ணும் கால்நடைகளும், வன விலங்குகளும் மடிந்து அழிந்து போகின்றன. இவற்றை எரிக்கும் போது புற்றுநோயை உருவாக்கக்கூடிய `டையாக்சின்' எனப்படும் கொடிய நச்சுப்புகை வெளியாகிறது. புற்றுநோய், இனப்பெருக்க கோளாறுகள், மனநிலை பாதிப்பு, நோய் எதிர்ப்புத்திறன் குறைதல், நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே சுற்றுச்சூழலையும், மண் வளத்தையும், மக்களின் உடல் நலத்தையும் பாதிக்கும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தடுக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் கொண்டு வரவேண்டும். 2002-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு பிறகு பின்வாங்கப்பட்டு விட்ட தமிழ்நாடு பிளாஸ்டிக் பொருட்கள் (விற்பனை, சேமிப்பு, எடுத்து செல்லுதல் மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும்) சட்டத்தை வருகிற சட்ட‌ப் பேரவை கூட்டத் தொடரில் கொண்டுவர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தி உ‌ள்‌ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்