6 மாதத்தில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் : பெரியகருப்பன்!
புதன், 30 ஜனவரி 2008 (10:17 IST)
ரூ.5 கோடி செலவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 6 மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர் என்.நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூ.), மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சில இடங்களில் ஏற்பட்ட விரிசலைத் தடுக்கும் பணியின் தற்போதைய நிலை என்ன? என்ற கேள்வி எழுப்பினார். இதற்கும், மீனாட்சி அம்மன்கோவில் திருப்பணிகள் தொடர்பாக உறுப்பினர்கள் கேட்ட துணைக்கேள்விகளுக்கும் அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட விரிசல்களை தடுக்கும் பணி குறித்து புதிய வல்லுனர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக மீனாட்சி நாயக்கர் நுழைவு வாயில் மண்டபத்தில் உள்ள விரிசல் ஏற்பட்டுள்ள உத்திரத்தை அகற்றிவிட்டு புதிய கல் உத்திரம் நிர்மாணம் செய்யவும், விரிசல் ஏற்பட்டு உள்ள தூண்களுக்கு பதிலாக தற்போதைய கலை வண்ணம் சிறிதும் மாறாமல் புதிய தூண்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பெங்களூரில் இருந்து புதிய உத்திரக்கல் கொள்முதல் செய்யப்பட்டு கல்விரிசலை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடந்த 1995ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இப்போது இந்த விரிசல் பணிகள் தவிர 5 கோடி ரூபாய் செலவில் மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகளை முடித்து இன்னும் 6 மாதத்தில் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.