தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கச்சத்தீவில் உரிமை பெற்றுத்தரப்படும்: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

திங்கள், 28 ஜனவரி 2008 (16:37 IST)
ஒப்பந்தப்படி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், உரிமையை மீட்டுத்தரும்படி மத்திய அரசிடம் வற்புறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்றஆற்காடு வீராசாமி ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சட்ட‌ப் பேரவை‌யி‌ல் இன்று தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும் அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட், இந்திய கம்யூனிஸ்‌ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சார்பில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுவது குறித்து கே‌ள்‌‌வி எழு‌‌ப்‌பின‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌‌மி கூறுகை‌யி‌ல், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற நிகழ்வுகள் பற்றி முதலமைச்சர் கருணாநிதி மிகவும் வேதனைப்படுகிறார். சமீபத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். விரைவில் அந்த மீனவர்கள் மீட்கப்படுவார்கள்.

தமிழக ‌‌ீனவர்கள் மீன் பிடிக்கும் போது அவர்களையும் அறியாமல் இந்திய கடல்பகுதியை தாண்டி இலங்கை பகுதிக்கு சென்று விடுகிறார்கள். இதனால்தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 1974-1976 ஆண்டு வரை இந்திய, இலங்கை அரசுகள் செய்துக் கொண்ட ஒப்பந்தப்படி சர்வதேச கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லையை தமிழக மீனவர்கள் மீறக்கூடாது என்று மீனவர்கள் மற்றும் விசை படகு சங்கத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவ கிராமங்களில் தண்டடோரா மூலமும், டீசல் எண்ணெ‌ய் அட்டையிலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது. கடலு‌க்கு செ‌ல்லு‌ம் மீனவர்கள் அடையாள அட்டை, படகுகளுக்கான லைசென்சு ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடல் எல்லையை மீறாத வகையில் இந்திய கடலோர படையினர் ரோந்துகளில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லையை மீறும் மீன்பிடி படகுகளுக்கு அபாரதமும் விதிக்கப்படுகிறது.

கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் அந்த பகுதியில் மீன்பிடிப்பது, வலைகளை காயப்போடுவது போன்ற பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவை மதிக்கப்படவில்லை, மீறப்படுகின்றன. எனவே ஒப்பந்தப்படி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், உரிமையை மீட்டுத்தரும்படி மத்திய அரசிடம் வற்புறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று ஆற்காடு வீராசாமி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்