சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சேது சமுத்திரத் திட்டக் கால்வாய் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் சேது சமுத்திர திட்டக் கால்வாய் பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
தமிழ்நாட்டின் வளம்- முன்னேற்றம், தென் மாவட்டங்களின் வளர்ச்சி, இந்தியப் பொருளாதார மேம்பாடு, கடலோரப் பாதுகாப்பு ஆகியவைகளை உள்ளடக்கிய, தமிழர்களின் 150 ஆண்டுகால கனவான சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தின் பணிகள் மிக வேகமாக நடைபெற்று 2008-இல் முடிவடையக் கூடும் என்ற நிலையில் உள்ளது.
இதனால், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பெருமை வந்து விடுவதோடு 2009-இல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. போன்ற எதிர்க் கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக பாதகம் ஏற்படும் என்பதால், அக்கட்சிகள் "ராமர் சேது'' என்ற ஆதாரமற்ற ஒன்றின் மூலம் மக்களின் மத நம்பிக்கையை முன்வைத்து நீதிமன்றங்கள் வரை சென்றுள்ளன.
இவ்விவகாரத்தில், மத்திய அரசு மேலும் கால அவகாசம் கோராமல், உச்ச நீதிமன்றத்தில் தக்க முறையில் வழக்கினை நடத்தி முடித்து, நிறுத்தப்பட்ட பணிகள் மேலும் தொய்வின்றித் தொடர அனைத்து முயற்சிகளையும் விரைந்து எடுக்க வேண்டுமென்று இக்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அண்ணாவிற்கு எதிரான அ.இ.அ.தி.மு.க.!
அ.இ.அ.தி.மு.க.வின் நிலைப்பாடு சேது சமுத்திர திட்டத்தை அடியோடு கைவிடப்பட வேண்டும் என்று அறிவிக்கும் நிலைக்கு இன்று சென்றுள்ளது. அதுவும் அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டு அண்ணாவின் விருப்பத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகவும் அ.இ.அ.தி.மு.க. நடந்து வரும் நிலையை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
முதலில் வழித் தடத்தை மாற்றிட வேண்டும் என்று தொடங்கிப் பிறகு திட்டமே கூடாது என்று கூறிடுவது தமிழ்நாட்டுக்கு அ.இ.அ.தி.மு.க. செய்யும் மாபெரும் துரோகம் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சேது சமுத்திரப் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அத்தனை கட்சிகளும் இணைந்தும், தனித்தனியாகவும் பல்வேறு வகையில் பிரச்சாரங்கள், அறப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருவதைத் தொய்வின்றித் தொடர வேண்டும்.
இப்பாதுகாப்புக் குழுவின் சார்பில் ராமநாதபுரத்தில் ஓர் எழுச்சிமிக்க விளக்கப் பொதுக் கூட்டத்தை, முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் பிப்ரவரியில் நடத்துவோம்.