சென்னை‌யி‌ல் ரூ.100 கோடியில் மாநில நூலகம்: கருணாநிதி!

புதன், 9 ஜனவரி 2008 (10:32 IST)
''சென்னை கோட்டூரில் 100 கோடி ரூபா‌யில் நவீன மாநில நூலகம் அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக க‌ண்காட்சி‌யி‌ல் பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடந்தது. இ‌தி‌ல் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு தமிழ் எழுத்தாளர்கள் மா.சு.சம்பந்தன், கவிஞர் புவியரசு, மு.ராமசாமி, சு.தமிழ்ச்செல்வி, பிறமொழி (மலையாளம்) எழுத்தாளர் அ.சாரா ஜோசப் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் பொற்கிழியும், கேடயமும் வழங்கினா‌ர்.

பி‌ன்ன‌ர் அவ‌ர் பேசுகை‌யி‌ல், தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது இந்த புத்தக காட்சி. இந்த புத்தக காட்சியை ஏற்பாடு செய்துள்ள, தமிழ் மொழிக்கு தங்களின் கடமையாக கருதிக் கொண்டிருப்போருக்கு சொல்லிக் கொள்கிறேன், புத்தக காட்சி என்ற பெயரை உண்மையான பொருளை தரத்தக்க வகையில் மாற்ற வேண்டும் என்பதாகும். இங்கு வைக்கப்படுகிற புத்தகங்கள் படிக்கப்பட வேண்டும். வாங்கப்படுகின்ற புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும். புத்தகங்கள் வெறும் காட்சிப் பொருளாக மாத்திரம் இருக்கக் கூடாது. அவைகள் படிக்கப்பட, உணரப்பட, பின்பற்றப்பட வேண்டிய அறிவுரை கருவூலங்களாக அவை இருக்க வேண்டும்.

2007-08 பட்ஜெட்டில் தற்கால அறிவியல் நூல்கள், நவீன வெளியீடுகள், வரலாற்று பின்னணி கொண்ட தகவல்கள் மற்றும் மேற்கோள் தொகுப்புகள் சாதாரண மக்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையை மாற்றிட இவை அனைத்தும் அவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் வகையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நூலகம் ஒன்றை இந்த அரசு அமைக்கும். அனைத்து நூல்கள் மற்றும் இணைய வெளியீடுகளோடு நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாபெரும் மாதிரி நூலகமாக அது அமையப் பெறும். ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் அந்த நூலகத்திற்கு நூலக ஆணையத்தின் பங்களிப்பாக ரூ.80 கோடியும், அரசின் பங்களிப்பாக ரூ.20 கோடியும் இருக்கும் என்று அறிவித்தேன்.

அது என்னவாயிற்று என நீங்கள் யாரும் கேட்கவில்லை என்றாலும், உங்கள் உள்ளத்தில் அந்த நினைவு அழுந்தியிருக்கும் என்பது எனக்கு தெரியும். நான் வாக்குறுதியை அதிகம் மதிப்பவன். அதைவிட வாக்குறுதியை யார் கேட்டீர்களோ அவர்களை அதிகம் மதிப்பவன். இந்த முயற்சிக்காக எவ்வளவு பங்கீடு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டதோ, அது தரப்பட்டு விட்டது. அதற்கான இடம் பார்வையிடப்பட்டு, வாங்கப்பட்டது. விரைவில் அங்கு அடிக்கல் நாட்டப்படும்.

மாநில நூலகம் கட்டுவதற்கு மைலாப்பூர்-திருவல்லிக்கேனி வட்டம் கோட்டூர் கிராமத்தில் 8 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி கல்வித் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் நவீன மாநில நூலகம் கட்ட உள்நாட்டு, வெளிநாட்டு கட்டிட வடிவமைப்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரியதில் 23 நிறுவனங்கள் கட்டிடத்தை வடிவமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. அவர்களில் தகுதி வாய்ந்த 9 வடிவமைப்பாளர்கள் மாநில நூலகத்திற்கான கட்டிட வடிவமைப்பை உருவாக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த 9 வடிவமைப்பாளர்கள் தயாரித்து அளிக்கும் மாதிரி அமைப்புகளில் சிறந்த அமைப்பு இந்த மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு நூலக கட்டிட கட்டுமான பணி விரைவில் தொடங்கும்.

மற்றொரு அறிவிப்பு, புத்தக பூங்கா அமைத்திட அரசே நிலம் வழங்கும் என்று அறிவித்தோம். சென்னையில் மாபெரும் `புத்தக பூங்கா' நூல் வெளியீட்டுக்குழுவினர் அமைத்திட அரசு நிலம் வழங்கி ஆதரவு தரும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயலாக்க புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் இடத் தேர்வு நடைபெற்று வருகிறது. இடத் தேர்வு முடிந்ததும், அந்த இடத்தை புத்தக பூங்கா அமைத்திட அரசு வழங்கும். அடுத்த புத்தக பூங்கா நிகழ்ச்சி நடைபெறும் போது அந்த கட்டிடங்களுடைய திறப்பு விழாக்களும் நடந்திருக்கும். அதனுடைய ஆண்டு விழா நடைபெறும் அளவுக்கு அந்த பணிகள் வேகமாக இருக்கும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பே‌சினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்