தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வேலையில்லா ஓவிய ஆசிரியர்கள் நலச்சங்கம் சென்னையில் ஜனவரி 10ஆம் தேதி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநில தலைவர் சேகர், செயலாளர் தர்மராசு, நிர்வாகிகள் வடிவேல், இளமதி ஆகியோர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் படித்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவிய ஆசிரியர்கள் வேலையில்லாமல் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன.
தொடக்கப் பள்ளிகளில் ஓவியத்தை ஓர் அடிப்படை பாடமாக அறிவித்து அதற்கான ஆசிரியர் பணியிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும். இதேபோல ஆதிதிராவிடர் பள்ளிகளிலும் நிரப்பப்படாமல் உள்ள ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். சிறப்பாசிரியர் பணியிடங்களில் ஓவிய ஆசிரியர்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும்.
நடுநிலைப் பள்ளிகளிலும் புதிதாக ஓவிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜனவரி 10ஆம் தேதி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். ஏற்கனவே 2006 ஆம் ஆண்டும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் பேரணி நடத்தி தமிழக அரசிடம் மனுவும் அளித்தோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனால் தமிழகம் முழுவதும் வேலையில்லாத ஓவிய ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஓவியத்தை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. எனவே தமிழக அரசு எங்கள் கோரிக்கைகள் மீது இனியாவது உடனடி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.