மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு: ஜெயலலிதா வலியுறுத்தல்!
செவ்வாய், 8 ஜனவரி 2008 (16:52 IST)
மழையினால் நெல் மூட்டைகள் நனைத்து பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், பலத்த மழை பெய்ததன் விளைவாக விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திறந்தவெளி களத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையினால் நனைந்துள்ளன. இந்த நெல் மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யும் போது, மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் வரை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயி களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பரவலாக இருக்கும் என்று தெரிவித்தும், அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள திறந்தவெளி களங்களுக்கு மேற்கூரை அமைத்துத் தர வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்கள் நடத்தியும், தி.மு.க. அரசு அதைப்பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் தான் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
மழையில் நெல் மூட்டைகள் நனைந்ததன் காரணமாக விவசாயிகளுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்பு அடைந்து இருக்கிற அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இது போன்ற நிலைமை இனிமேல் ஏற்படாமல் இருக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிடங்குகளின் திறந்தவெளி களங்களுக்கு மேற்கூரைகள் அமைக்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.