5,000 கோடியில் கல்பாக்கத்தில் புதிதாக 2 அதிவேக ஈனுலைகள்!
செவ்வாய், 8 ஜனவரி 2008 (10:36 IST)
சென்னையை அடுத்துள்ள கல்பாக்கத்தில் 5,000 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் புதிதாக 2 அதிவேக ஈனுலைகள் அமைக்கப்படும் என்று கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ் கூறியுள்ளார்.
வெல்டிங் தொழில்நுட்பம் பற்றிய 3 நாள் சர்வதேச மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று துவங்குகிறது. இது தொடர்பாக கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மிகவும் கவனம் செலுத்த வேண்டிய துறையில் வெல்டிங் தொழில்நுட்பமும் ஒன்றாகும். மின்சார தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில், நிலக்கரி, அணு, காற்று, நீர், சூரிய ஒளி இவற்றில் எதிலிருந்து மின்சாரத்தை தயாரித்தாலும் வெல்டிங் தொழில்நுட்பம் மிகவும் அவசியம்.
இந்திய வெல்டிங் பயிற்சி நிறுவனமும், சர்வதேச வெல்டிங் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடந்தும் 60-வது மாநாட்டில் 20 நாடுகளைச் சேர்ந்த 700 வெல்டிங் தொழில்நுட்ப நிபுணர்கள், பொறியாளர்கள் இதில் கொள்கிறார்கள். கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.3,400 கோடி செலவில் ஈனுலை (பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்ஸ்) அமைக்கும் பணி கடந்த 2003-ம் ஆண்டு துவங்கியது. 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த அணு உலை 2010-ம் ஆண்டில் அமைக்கப்பட்டு விடும்.
11-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் தலா 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட மேலும் 2 ஈனுலைகள் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் என்று அணு விஞ்ஞானி பல்தேவ்ராஜ் கூறினார்.