தேர்தலுக்காக ராமருக்கு எதிரியல்ல என கூறுகிறார் முதல்வர்- ராமகோபாலன்

திங்கள், 7 ஜனவரி 2008 (10:06 IST)
விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் முதல்வர் கருணாநிதி ராமர் பாலத்துக்கு நான் எதிரியல்ல என கூறி வருகிறார் என்று இந்து முன்னணி அமைப்பு நிறுவனர் ராமகோபாலன் தெரிவித்தார்.

இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம் நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே பொத்தனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அரசு ராஜா தலைமை தாங்கினார்.

இரண்டு நாட்கள் நடந்த இந்த கூட்டத்தில் நேற்று இந்து முன்னணி அமைப்பு நிறுவனர் ராமகோபாலன் பங்கேற்று பேசினார். பின் நிருபர்களிடம் அவர் கூறிய:

தமிழக முதல்வர் கருணாநிதியை இரண்டு காரணங்களுக்காக பாராட்டுகிறேன். ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருந்த பசுக்களை சரியாக பராமரிக்காததால் சமீபத்தில் 100 பசுக்கள் வரை இறந்து விட்டன. தகவலறிந்த முதல்வர் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பசுக்களை பராமரிக்க உத்தரவிட்டார். அடுத்ததாக கொலை செய்யப்பட்ட தென்காசி இந்து முன்னணி செயலாளர் குமார்பாண்டியன் மனைவிக்கு அரசு வேலை வழங்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆயிரம் பசுக்களை பக்தர்கள் நேர்த்தி கடனாக விட்டுள்ளனர். அவற்றை ஏலத்தில் எடுத்து கசாப்பு கடைக்கு அனுப்புகின்றனர். அதை தமிழக அரசு தடுக்க வேண்டும். பசுக்களை பராமரிப்பதால் நஷ்டம் இல்லை. லாபம் தான் உண்டு. பசுக்களுக்கென தனியாக கோயில்களில் "கோசலம்' கட்டி பாதுகாக்க வேண்டும். கோயில் நிலம், தோட்டம், கட்டிடங்கள் போன்றவற்றை அடிமாட்டு விலைக்கு ஏலம் எடுக்கின்றனர்.

அவை தனியார் வாங்கும் வாடகையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. கோயில் சொத்துகளுக்கு வாடகை உயர்த்தினால் யாரும் ஏலம் எடுக்க வருவதில்லை என அறநிலைய துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறும் காரணம் வேடிக்கையாக உள்ளது. வாடகை கொடுக்காத கடையில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும்.

ஏலம் விடுவதில் அறநிலைய துறை அதிகாரிகள் அடிக்கும் கூட்டுக் கொள்ளையை நிறுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம் திருப்பாலியூர் வரதராஜ பெருமாள் கோயிலில் 4.80 ஏக்கர் நிலம் ஏலம் விடப்பட்டது. ஏலத்தொகை குறைவாக கேட்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட வக்கீல் சரியாக வாதாட வில்லை.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஏமாற்றத்தையும், வருத்ததையும் அளிக்கிறது. குற்றவாளிகளுக்கு ூக்கு தண்டணை விதிக்க வேண்டும். அதற்கான மேல் நடவடிக்கையில் இந்து முன்னணி ஈடுபட்டுள்ளது. மனித உரிமை கழகம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது.

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்றில் ஒரு பங்கு நக்ஸல்கள் ஊடுருவியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டணியால் மத்திய அரசு நக்ஸல்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் கைது செய்யப்பட்டேனா? என சவால் விடுத்தார்.

"ராமர் பாலத்துக்கு நான் எதிரியல்ல' என முதல்வர் கருணாநிதி அந்தர் பல்டி அடித்து வருவது வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துதான். எ‌ன்று ராமகோபாலன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்