தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பெய்த அடைமழையால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மார்கழி மாதம் பிறந்து கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு முதல் விடிய விடிய சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
காலையில் சென்னையிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதற்கு தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை பெய்த மழை அளவு சென்டி மீட்டரில் வருமாறு: அதிகபட்சமாக வேதாரண்யம் 7, சோழவரம் 5, செங்குன்றம் 4, சென்னை விமான நிலையம், தாம்பரம், தாமரை பாக்கம் தலா 3, சென்னை, செய்யூர் 2, மதுராந்தகம், பூவிருந்தமல்லி, செம்பரம்பாக்கம், கொரட்டூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் தலா 1.