''கட்டுமானத் தொழிலுக்கு முக்கியமாகப் பயன்பட்டு வரும் செங்கல், மணல் போன்ற பொருட்களின் விலையும் இன்றைக்கு எட்டிப்பிடிக்க இயலாத வகையில் ஏறிப்போயுள்ளன. அதன் விலைகளையும் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இறக்குமதி செய்யப்படும் சிமென்ட்டை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட இடங்களில் இருப்பு வைத்து நுகர்வோருக்கு அடக்க விலையில் லாபம் ஏதுமின்றி நேரடியாக விற்பனை செய்யப் போவதாக அறிவித்த தமிழக அரசை பாராட்டுகிறேன். சிமெண்ட் விலை ஏற்றத்தின் காரணமாக கட்டுமானத் தொழிலில் இதுவரை இருந்து வந்த இன்னல்கள் இந்நடவடிக்கையின் காரணமாக ஓரளவு நீங்கும் என்பதால் இதை பெரிதும் வரவேற்கிறேன்.
பர்மிட் முறையில் வினியோகிக்கப்படும் இந்த சிமெண்ட் விலைக் குறைப்பு ஏழை, எளிய மக்களுக்கு குறிப்பாக கட்டுமானத் தொழிலில் உள்ள உழைப்பாளர்களுக்கு மிகவும் பயன்படும். மேலும் தமிழகத்திலுள்ள தனியார் சிமென்ட் ஆலை உரிமையாளர்கள் சிமெண்ட் விலையைக் குறைத்துக் கொள்ள முன்வரவில்லை என்றால், தனியார் சிமெண்ட் ஆலைகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிட அரசு தயங்காது என்ற எச்சரிக்கையையும் தமிழக அரசு விடுத்திருப்பது நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது என்று மக்கள் இதை ஏற்பார்கள் என்பது நிச்சயம்.
அதே போல கட்டுமானத் தொழிலுக்கு முக்கியமாகப் பயன்பட்டு வரும் செங்கல், மணல் போன்ற பொருட்களின் விலையும் இன்றைக்கு எட்டிப்பிடிக்க இயலாத வகையில் ஏறிப்போயுள்ளன. தொழிலில் உள்ள பிரச்சினைகளை நீக்கிட தீர்மானித்து விட்டால் அதிலுள்ள அனைத்து இடைஞ்சல்களையும் அகற்றினால் தான் அதன் முழுப்பயனும் மக்களுக்கு கிடைக்கும் என்பதால் செங்கல், மணல் போன்ற பொருட்களின் விலைகளையும் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணசாமி வலியுத்தியுள்ளார்.