தமிழ்நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைப் பணிகளை விரைவுபடுத்துமாறு மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு உத்தர விட்டுள்ளார்.
இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக பணிகள் நடைபெறுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த பின்னடையை சரி செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது.
சென்னை நகர திட்டங்களை பொறுத்த வரை சில எதிர்பாராத காரணங்களால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை ஓய்ந்துவிட்ட நிலையில் அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் சுமார் ரூ.9650 கோடி செலவில் 1788 கி.மீ தூரத்திற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வரும் நெடுஞ்சாலை பணிகளை அமைச்சர் டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்.
அதன் விவரம் வருமாறு:
தமிழ்நாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 31 திட்டப் பணிகளை சுமார் ரூ.9650 கோடி செலவில் மேற்கொண்டு வருகிறது. சுமார் 1788 கி.மீ நீளத்திற்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 16 பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு-தெற்கு இணைப்புச் சாலையின் ஓசூர்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், திண்டிவனம் - திருச்சி, திருச்சி - திண்டுக்கல், திருச்சி - மதுரை, கரூர் - கோவை, கோவை - மேட்டுப்பாளையம், சேலம் - கேரளா எல்லைப் பகுதி வரை பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை நடைபெற்று வருகின்றன.
இத்துடன் மதுரை - தூத்துக்குடி, புதுச்சேரி - திண்டிவனம், தஞ்சாவூர் - திருச்சி, திருச்சி - கரூர், சேலம் - உளுந்தூர்பேட்டை சாலைகளில் நான்கு வழிப்பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தவிர சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் சென்னை புறவழிச் சாலை மற்றும் தங்கநாற்கர சாலைக்கு இணைப்புச் சாலைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதில் 2 திட்டங்கள் (தும்மிப்பாடி - சேலம் மற்றும் லாலாபேட் ஆர்ஓபி) ஜூலைக்குள் முடியும் என்றும், 3 திட்டங்கள் (வடக்கு தெற்கு இணைப்புச் சாலையில்) நவம்பருக்குள்ளும், 11 திட்டங்கள் (வடக்கு-தெற்கு இணைப்புச் சாலையில்) 6, திருச்சி - மதுரை இடையில் 4 மற்றும் சென்னை நகரில் 1 திட்டமும்) டிசம்பர் 2008-க்குள்ளும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 15 திட்டங்களை 2009-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 6 திட்டங்கள் முதல் காலாண்டுக்குள் முடிக்கப்படும். மற்ற 9 திட்டங்கள் மார்ச் 2009-க்கு பிறகு முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்படுகிறதா என்பதை கவனிப்பதோடு ஒப்பந்தாரர்களின் செயல்பாடுகளையும் அரசு அதிகாரிகளும், திட்ட மேற்பார்வையாளர்களும் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.