காரை‌க்கா‌ல் அ‌ம்மையா‌ர் கோ‌வி‌ல் குள‌த்தை அழகுபடு‌த்த ரூ.3.47 கோடி ஒது‌க்க‌ீடு!

Webdunia

சனி, 29 டிசம்பர் 2007 (12:53 IST)
புதுவை, காரைக்கால் அம்மையார் கோவில் திருக்குளத்தை தூர்வாரி அழகுபடுத்தும் பணிக்காக மத்திய சுற்றுலா அமைச்சகம், ரூ.3.47 கோடி ஒதுக்கி உள்ளதாக புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி‌த் தலைவர் நாஜிம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காரைக்கால் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்த காரைக்கால் அம்மையார் கோவில் திருக்குளத்தை தூர்வாரி அழகுபடுத்தும் பணி, பிரம்மாண்டமாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பல விதமாக மதிப்பீடுகள் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.

இறுதியாக ரூ.3.60 கோடி மதிப்‌பிலான ‌தி‌ட்ட‌ம் உருவா‌க்க‌ப்ப‌ட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தொகையை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் மூலம் பெறலாம் என புதுவை அரசு சார்பில் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துறையின் இயக்குனர் முகம்மது மன்சூர் ஆகியோரது முயற்சியி‌ல் இந்த கோரிக்கை ம‌த்‌திய அரசு‌க்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சக இணை செயலாளர் நீலாதத்தன், உதவி இயக்குனர் வெங்கடேசன், தென் மாநில சுற்றுலா துணை இயக்குனர் தீபா லஸ்கர் ஆகியோரிடம் தொடர்ந்து பேச‌ப்ப‌ட்டது.

இந்நிலையில், காரைக்கால் அம்மையார் ஆலய திருக்குளம் அழகுபடுத்தும் பணிக்காக மத்திய சுற்றுலா அமைச்சகம் ரூ. 3.47 கோடிக்கு அனுமதி அளித்துள்ளதாக, தென் மாநில சுற்றுலா துணை இயக்குனர் தீபா லஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் புதுவை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த திட்டம் செயல்படுத்துவதற்காக அனைத்து வகைகளிலும் பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியை காரைக்கால் பகுதி மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" எ‌ன்று நாஜிம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்