''தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் வரை உரம் தட்டுப்பாடு இருக்காது'' என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், வேளாண்மை சாகுபடிக்கு டிசம்பர் மாதத்துக்கு தேவையான 45,000 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரத்தில் 18.12.2007 வரை 23,990 மெட்ரிக் டன்கள் ஸ்பிக், மங்களூர் கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ், இப்கோ, ஜூவாரி மற்றும் ஐ.பி.எல். நிறுவனங்கள் மூலம் மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
டிசம்பர்-ஜனவரி மாதங்களில் நம் விவசாயிகளுக்கு தேவையான 77,000 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரத்தினை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய ரசாயன, உரத்துறை அமைச்சருக்கு 23.11.2007-ல் தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியதின் அடிப்படையில், 24,200 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம் ஜோர்டானிலிருந்து எம்.வி.அலினா என்ற கப்பல் மூலம் 20.12.2007 அன்று தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைகிறது. இந்த உரம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
ஜனவரி மாதத்துக்குத் தேவைப்படும் 33,750 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரத்தில் இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்தின் மூலம் விசாகப்பட்டினத்திலிருந்து 17,500 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம் கொள்முதல் செய்து விநியோகம் செய்ய முன்பணம் டான்பெட் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 15,210 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம் ஸ்பிக், மங்களூர் கெமிக்கல்ஸ், பெர்டிலைசர்ஸ், இப்கோ நிறுவனம் மூலம் விநியோகம் செய்திட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் டிசம்பர் - ஜனவரி மாதங்களுக்கு உரத்தட்டுப்பாடு அறவே இருக்காது என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.