கோதுமையை விட நெல்லுக்கு ஆகும் உற்பத்திச் செலவு மிகவும் அதிகம் என்பதால் கோதுமைக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1,000 ரூபாய் வழங்கியதுபோல், நெல்லுக்கும் குறைந்த பட்சம் குவிண்டால் ஒன்றுக்கு 1,000 ரூபாய் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று அ.இ.அதி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கோதுமைக்கான கொள்முதல் விலையை மட்டும் குவிண்டால் ஒன்றுக்கு 1,000 ரூபாய் என உயர்த்தி அண்மையில் மத்திய அரசு ஓர் உத்தரவிட்டது. அதே சமயத்தில் நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தாமல் மௌனம் சாதித்தது.
இதுகுறித்து, நெல் அதிகமாக சாகுபடி செய்யும் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றை சார்ந்த விவசாயிகள் நெல்லுக்கான கொள்முதல் விலையையும் குவிண்டால் ஒன்றுக்கு 1,000 ரூபாய் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மிகப் பெரிய போராட்டங்களை நடத்தினார்கள்.
இதையடுத்து மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 50 ரூபாய் ஊக்கத் தொகை அளிக்க முன் வந்தது. ஆனால் இதற்கு நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிருப்தி நிலவியதால் மத்திய அரசு 50 ரூபாய் ஊக்கத் தொகைக்கு மாறாக, 100 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது.
இதன்படி 2007-2008 ஆம் ஆண்டு முதல் ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 775 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு 745 ரூபாயும் வழங்கப்படும். தற்போது தமிழக அரசின் சார்பில் குவிண்டால் ஒன்றுக்கு மேலும் 50 ரூபாய் ஊக்கத் தொகையாக அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
இதன் மூலம் முதல் ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 825 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 795 ரூபாயும் கிடைக்கும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போதாது. கோதுமையை விட நெல்லுக்கு ஆகும் உற்பத்திச் செலவு மிகவும் அதிகம் என்பதால் கோதுமைக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1,000 ரூபாய் வழங்கியதுபோல், நெல்லுக்கும் குறைந்த பட்சம் குவிண்டால் ஒன்றுக்கு 1,000 ரூபாய் கண்டிப்பாக வழங்க வேண்டும்.
கிராமப்புறங்களில் தற்போது கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அவர்கள் டீசல் இன்ஜின்களை வாடகைக்கு எடுத்து நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் விவசாயிகளுடைய உற்பத்திச் செலவு மேலும் கடுமையாக அதிகரித்திருக்கிறது.
இதே நிலைமை நீடித்தால் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதோடு பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அரிசிப் பற்றாக் குறையும் ஏற்படும். இதன் மூலம் விவசாயிகள், நுகர்வோர்கள் என இருதரப்பினருமே பாதிக்கப்படுவர். தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் தொழிலை விட்டு விட்டு வேறு ஏதாவது தொழில் செய்யலாமா என்ற சிந்தனையில் இருக்கிறார்கள்.
விவசாயிகளின் துயரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசை நிர்பந்தப்படுத்தியோ அல்லது மாநில அரசின் நிதியிலிருந்தோ நெல்லுக்கு குறைந்தபட்சம் குவிண்டால் ஒன்றுக்கு 1000 ரூபாய் உடனடியாக வழங்க முதலமைச்சர் கருணாநிதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.