வண்டிக்குள் இருப்போர் வெளியே தெரியாமல் மறைக்கும் கருப்பு பேப்பரை கார், வேன்களில் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் சி.பி.சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் சி.பி.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாகனங்களுக்கு பொருத்தப்படும் கண்ணாடிகளின் தரம் மற்றும் ஒளி ஊடுருவும் தன்மையின் விழுக்காடு பற்றி மாநில அரசுகளுடன், மத்திய அரசால் நடத்தப்பட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அநேக மோட்டார் வாகனங்களில் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளில் கருப்பு வண்ணத்திலான நைலான் இழை பேப்பர்கள் ஒட்டுவது வழக்கமாகி வருவதனால், வாகன ஓட்டுநர் முன்பக்க கண்ணாடி, பக்கவாட்டு கண்ணாடி வழியாக சாலையினை சரிவர கவனித்து ஓட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, சாலை விபத்துக்கள் நடக்க வழிவகுக்கிறது. மேலும் சில சமுதாயச் சீரழிவு நிகழ்ச்சிகள் நடைபெறவும் இடம் அளிக்கிறது.
சமுதாய சீரழிவு நடவடிக்கைகள் வாகனங்களுக்கு உள்ளே நடைபெறாமல் தடுக்கவும், நாட்டின் நலன் கருதியும், மத்திய மோட்டார் வாகன விதி 100 (2)ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடுமையான முறையில் செயல்முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வாகனங்களில் முன்பக்கம், பக்கவாட்டு கண்ணாடிகளில் கருப்பு வண்ணத்திலான நைலான் இழை பேப்பர்கள் ஒட்டுவது மாநிலம் முழுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களும் இப்பொருள் குறித்து செயலாக்கப்பணிகளை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 177-ன்படி முதல் குற்றத்திற்கு ரூ.100 அபராதமும், இரண்டாவது மற்றும் அதன் தொடர்ச்சியான குற்றங்களுக்கு ரூ.300 அபராதமும் வசூலிக்கப்படும்.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 53(1) எ படி போக்குவரத்து அல்லாத வாகனங்களை பொருத்தமட்டில் பதிவு சான்று தற்காலிகமாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் எனவும் போக்குவரத்து வாகனங்களுக்கு பதிவுச் சான்றின்மீது தற்காலிக தடை மட்டுமல்லாது தகுதிச் சான்றினை தற்காலிக தடை செய்ய தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 119-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் சி.பி.சிங் கூறியுள்ளார்.