''சாலை பாதுகாப்பு பிரச்சனை தொடர்பான பொது நல வழக்கில் அரசு விரையில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளது'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உச்ச நீதிமன்றத்தில் காமன் காஸ் சார்பில் சாலை பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக ஒரு பொது நலன் கருதும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு தமிழக அரசு விரிவாக ஒரு பதில் மனுவும் தாக்கல் செய்து இருந்தது. 2005-ஆம் ஆண்டு மார்ச் மாதமே இந்த பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு 2007-ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி (நேற்று) விசாரணைக்கு வந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றத்தின் தாக்கீது கிடைக்கவில்லை. இதனால்தான் தமிழக அரசு சார்பில் இந்த வழக்கில் ஆஜராகி வாதாட முடியவில்லை.
இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் ஜனவரி 28ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும்படி தமிழக அரசு சார்பில் டிசம்பர் 3ஆம் தேதி மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு விரைவில் விளக்கம் அளிக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.