சென்னையில் இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் இப்போது மருத்துவ மாணவர்கள் பிரச்சனை அரசியலாக்கப்பட்டு விட்டது. மருத்துவப் படிப்புக் காலம் ஐந்தரை ஆண்டிலிருந்து ஆறரை ஆண்டாக உயர்த்தப்படுவதாக மாணவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவப் படிப்புக் காலம் ஐந்தரை ஆண்டுகள் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
ஓராண்டு என்பது நான்கு மாதங்கள் கிராமப்புற மருத்துவமனைகளிலும், நான்கு மாதங்கள் தாலுகா மருத்துவமனைகளிலும், நான்கு மாதங்கள் மாவட்ட மருத்துவமனைகளிலும் 8 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெற்று பணியாற்றுவதற்காகத்தான். இந்த அடிப்படையில் தான் மத்திய அரசு சட்டம் கொண்டு வர உத்தேசித்துள்ளது. எனவே படிப்புக் காலம் உயர்த்தப்படுவதாக தவறாக புரிந்து கொண்டு மாணவர்கள் போராட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் இந்த பிரச்சனையில் சில அரசியல் கட்சிகள் உள்ளே புகுந்து மாணவர்களை தூண்டிவிட்டு வருகிறார்கள். இதனை மாணவர்கள் உணர வேண்டும். கிராமப்புற மருத்துவ சேவை பல்வேறு மாநிலங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அல்லாமல், கிராமப்புறங்களில் பணியாற்றுவதை சேவை மனப்பான்மையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் ஓராண்டு கிராமப்புற சேவைக்கான சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள சட்டத்தை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் போராடவில்லை. இங்கே மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் அரசியல் புகுந்துள்ளது. இதுவரை அரசியலே புகாமல் இருந்த புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் சென்று மாணவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அரசியல் தலைவர்களை அரசு அனுமதித்தது ஏன்? மாணவர்கள் அரசியலுக்கு அடிபணியாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.