மருத்துவ படிப்பு காலத்தை ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டாக நீட்டிக்க கூடாது'' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது குறித்து இல.கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் அன்புமணி மருத்துவ மாணவர்களை கட்டாயமாக கிராமச் சேவை செய்ய சொல்வதன் மூலம் தங்களுக்கு அவர் நன்மை செய்கிறார் என்று கிராம மக்கள் நினைத்து ஏமாறக்கூடாது. மாறாக, பயிற்சி பெற வேண்டிய மாணவர்களின் சோதனைக் களமாக கிராமத்து மக்களை மாற்ற நடைபெறும் முயற்சி இது என்பதை கிராம மக்கள் உணர வேண்டும்.
தங்களுக்கு படித்து முடித்து பட்டம் பெற்ற, அனுபவம் பெற்ற மருத்துவர்களே சிகிச்சை தர அனுப்ப வேண்டும் என்று கிராம மக்கள் போராட வேண்டும். கிராமப்புற மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டியது சுகாதாரத்துறையின் கடமை. அந்த கடமையை மாணவர்களை வைத்து செய்வது குற்றமாகும். கிராமப்புற மருத்துவமனைகள் நல்ல அடிப்படை வசதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு மக்கள் தொகைக்கு ஏற்ப அத்தகைய மருத்துவமனைகள் நிறுவப்பட்டு பயிற்சிபெற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்தி கிராம மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
ஏற்கனவே உள்ள மருத்துவமனைகள் கட்டமைப்பும், வசதிகள் இல்லாமல் இருப்பதும் சரிசெய்யப்பட வேண்டும். கிராமப்புற பணிக்காக வந்து விடுமுறையில் சென்று இருப்பவர்களையும், கிராமப்புற மருத்துவமனைகளின் நிரப்பப்படாத பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஒரு வருடம் முழுமையாக கிராமப்புற சேவை முடித்த மருத்துவர்களுக்கு உயர்கல்வி, பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்கலாம். கிராமத்தில் பணிபுரிய வரும் மருத்துவர்களுக்கு ஊதியம் அதிகமாக கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.
கிராமப்புற மருத்துவ சேவை தேவை. ஆனால் அது மாணவர்களின் படிக்கும் காலத்தை ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டாக நீட்டிக்க கூடாது. இதனை மத்திய சுகாதாரத்துறை உடனே அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலதலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.