அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய பெண்கள் கணவரால் துன்புறுத்தப்பட்டால் எங்கு உதவி பெறுவது என்பது தொடர்பான விவரங்களை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதர் டேவிட் ஹாப்பர் நேற்று வெளியிட்டார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் சர்வதேச பெண் வன்கொடுமை தடுப்பு தினத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கு செல்லும் பெண்கள் அங்கு வன்கொடுமைக்கு ஆளானால் எப்படி உதவி பெறுவது என்பது தொடர்பான துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் அமெரிக்காவில் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் எந்த அதிகாரியை தொடர்பு கொள்வது?, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் என்ன? என்பது போன்ற தகவல்கள் அடங்கியுள்ளன.
இந்த துண்டு பிரசுரத்தின் முதல் பிரதியினை அமெரிக்க துணைத்தூதர் டேவிட் ஹாப்பர் வெளியிட அமைச்சர் பூங்கோதை பெற்றுக் கொண்டார்.
அதன்பிறகு டேவிட் ஹாப்பர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை தூதரகம் மூலம் ஏராளமானோர் அமெரிக்கா செல்கிறார்கள். அமெரிக்காவுக்கு செல்லும் ஆண்கள், தங்கள் மனைவி, குழந்தைகளை `டிபன்டன்ட்' (சார்ந்திருப்போர்) விசா மூலம் அமெரிக்காவுக்கு அழைத்து செல்கிறார்கள். இவ்வாறாக ஆண்டுக்கு 40 ஆயிரம் `டிபன்டன்ட்' விசாக்கள், சென்னை அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இனிமேல், `டிபன்டன்ட்' விசாக்கள், வாங்க வரும் பெண்களுக்கு, சென்னை அலுவலகத்தில் ஒரு தாக்கீது அளிக்கப்படும். அதில் அமெரிக்கா சென்ற பின்னர், கணவரின் துன்புறுத்தலுக்கு ஆளானால், அவர்கள் எங்கு புகார் செய்வது? எந்த அதிகாரியை தொடர்பு கொள்வது? எந்தெந்த தொலைபேசி எண்களில் உதவி நாடுவது? என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த துண்டு பிரசுரம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
சமீபத்தில், தமிழகத்தை சேர்ந்த ஜெனிட்டா என்ற பெண், அமெரிக்காவில் கணவரின் துன்புறுத்தலுக்கு ஆளானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான நடவடிக்கையை, இரு நாட்டு அரசுகளும் பேசியே எடுக்க வேண்டும் என்று அமெரிக்க துணைத் தூதர் டேவிட் ஹாப்பர் கூறினார்.