சென்னையிலிருந்து ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்ற பெண்ணை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் வந்தது. இதையடுத்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் அஸ்லாம் தலைமையில் தனிப்படை காவலர்கள் சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொன்னேரி ரயில் நிலையத்தில் 90 மூட்டை ரேஷன் அரிசியுடன் நின்றுகொண்டிருந்த மீஞ்சூரை சேர்ந்த சீனுவாசன் ( 44) என்பவரை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.
அதேபோன்று வியாசர்பாடி ரயில் நிலையத்தில் 35 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த புளியந்தோப்பைச் சேர்ந்த ஜோதி (26) என்ற பெண்ணை கைது செய்த காவலர்கள் அவரிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று தண்டையார் பேட்டையில் மளிகைக் கடை ஒன்றில் ரேஷன் மண்எண்ணெய் விற்பனை செய்த மகேஷ் ( 35) என்பவரை காவலர்கள் கைது செய்தனர். அவரிடமிருந்து 90 லிட்டர் மண்எண்ணெய்யும், 9 குடும்ப அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.