அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் படுகாயமுற்று சுய நினைவிழந்து, தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்த திருச்சி பெண் ஜெனிட்டாவைக் கொல்ல நடந்த முயற்சிதான் விபத்து என்று அவருடைய தந்தை அளித்த புகாரின் மீது விசாரணை நடத்தப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி செபஸ்டியன். இவரது மகள் ஜெனிட்டா. இவருக்கும், காட்டூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த கிறிஸ்டி டேனியஸ் என்பவருக்கும் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது. கிறிஸ்டி டேனியஸ் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் தனது மனைவி ஜெனிட்டாவை அமெரிக்காவிற்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் ஜெனிட்டா காயம் அடைந்து கோமா நிலையில் உயிருக்கு போராடுவதாக இவரது தந்தை செபஸ்டியனுக்குத் தகவல் கிடைத்தது. தனது மகள் சுய நினைவு இழக்கும் அளவிற்கு படுகாயமுற்ற விபத்து குறித்து தனக்கு சந்தேகம் உள்ளது என்றும், இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரி திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பிறகு அவர் உடனடியாக புறப்பட்டு அமெரிக்கா சென்று, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட தனது மகளை, இந்திய தூதரகத்தின் உதவியினால் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தார்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெனிட்டாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டேனியஸ் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தனது மகள் ஜெனிட்டாவை ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்ததாக செபஸ்டியன் குற்றம்சாற்றினார்.
இந்தக் குற்றச்சாற்றை ஜெனிட்டாவின் கணவர் டேனியல் மறுத்திருந்தார். இவர் அமெரிக்காவில் இருந்தபடியே தனது விளக்கத்தை பத்திரிகைகளுக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பினார். அதில், அமெரிக்காவில் நடந்தது விபத்துதான். ஜெனிட்டா குடும்பத்தினரிடம் இருந்து ஒரு பைசா கூட வரதட்சணை வாங்கவில்லை. அப்படி வாங்கவேண்டிய அவசியமும் இல்லை. ஜெனிட்டா குடும்பத்தினர் திட்டமிட்டு நாடகம் நடத்தி வருகிறார்கள் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்காவில் ஜெனிட்டாவை காப்பாற்றி பத்திரமாக இந்தியா அனுப்பி வைத்த பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த மருத்துவர் சர்தார் இமானுல்லா என்பவர் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வடக்கு கரோலினாவில் உள்ள லேக் பாரஸ்ட் மருத்துவமனையில் தான் பணியில் இருந்ததாகவும் அப்போது ஜெனிட்டாவை படுகாயம் அடைந்த நிலையில் காவல் ரோந்து வாகனம் மூலம் தனது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் என்றும் கூறியிருந்தார்.
“அப்போது ஜெனிட்டா கோமா நிலையிலேயே இருந்தார். 80 விழுக்காடு அளவுக்கு மோசமான நிலையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதினோம். நான் சிகிச்சை அளிக்கும் போது அவரது குடும்பத்தினர் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று கருதினேன். அவர்கள் சரியான தகவல் எதையும் தரவில்லை. இதனால் எனக்கு சந்தேகம் வலுத்தது. ஆரம்பத்தில் அவரது கணவர் வந்து பார்த்தார். நாளடைவில் அங்கு வருவதையே நிறுத்தி விட்டார். ஜெனிட்டா உயிருக்கு போராடி கொண்டிருந்த போதும் உறவினர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. பரிதாப நிலையில் ஜெனிட்டா இருந்தார். இரக்கமில்லாத அவர்கள் அவரை தவிக்க விட்டு சென்று விட்டனர்” என்று கூறியிருந்தார்.
”இதுபற்றி இந்தியாவைச் சேர்ந்த எனது நண்பர்கள் சிலரிடம் கூறினேன். அவர்கள் ஜெனிட்டாவுக்கு உதவ முன் வந்தனர். அதை தொடர்ந்து ஜெனிட்டாவின் தந்தை செபஸ்டியன் வரவழைக்கப்பட்டார். அவர் ஜெனிட்டாவை பார்த்து கொண்டார். தனது கணவர் குடும்பத்தினர் தன்னை காரில் இருந்து தள்ளியதாக ஜெனிட்டா எங்களிடம் கூறினார். காரில் செல்லும் போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது காரில் இருந்து பிடித்து கீழே தள்ளி விட்டனர் என்று என்னிடம் கூறினார்” என்று மருத்துவர் சர்தார் இமானுல்லா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விளக்கமாகக் கூறியிருந்தார்.
ஜெனிட்டா சென்னைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தபோது நமது அலுவலகத்திற்கு வந்த அவரது சகோதரர், தனது கணவர், அவருடைய தாயார், கணவரின் சகோதரி ஆகியோர் தன்னை கட்டையால் அடித்து காயப்படுத்தியதாக சுய நினைவு பெற்ற ஜெனிட்டா தனது தந்தையிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஜெனிட்டாவின் தந்தை செபஸ்டியன் நேற்று முன்தினம் சென்னையில் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்தார். அதில், தனது மகளுக்கு நடந்த வரதட்சணை கொடுமை பற்றி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட அவர், புகார் மீது விசாரணை நடத்த திருச்சி நகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.
ஜெனிட்டாவின் தந்தை செபஸ்டியன் திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் (224/07) அளித்திருந்தார். அந்த புகாரில், தனது மகளை அவரது கணவர் கிறிஸ்டி டேனியஸ், அவரது தந்தை சேவியர், மாமியார் செல்லம், நாத்தனார் லீமா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தனது மகள் கோமா நிலைக்கு தள்ளபடக் காரணமான விபத்து குறித்து தனக்கு சந்தேகம் உள்ளதாகவும், அது குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். விசாரணை நடத்தப்படும் : திருச்சி காவல் ஆணையர்!
இது பற்றி திருச்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், “செபாஸ்டியன் அளித்துள்ள புகார் மீது விசாரணை நடத்தும்படி காவல் துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) உத்தரவிட்டு இருக்கிறார். இதுபற்றி திருச்சி மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள்'' என்றார்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெனிட்டாவை ஆம்புலன்ஸ் மூலம் அவரது தந்தை ஜெபஸ்டியன் திருச்சிக்கு அழைத்து சென்றார். அங்குள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.