''புதிய பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும்போது தீவிபத்துக்கான பாதுகாப்பு சான்றிதழ் பெறவேண்டும்'' என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
கும்பகோணத்தில் 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி தனியார் நடத்தி வந்த கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயரச் சம்பவத்தால் வேதனையடைந்த அவினாஷ் மித்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
அந்த வழக்கில், `எதிர்காலத்தில் பள்ளிக் கூடங்களில் தீவிபத்து நடக்காமல் தடுப்பதற்கு போதுமான தீ பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயமாக நடைமுறைப்படுத்த உத்தரவிடவேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த பொதுநலன் வழக்கு நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்து கூறுகையில், தற்போதைய ஏழைக் குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களில் படித்து வருகிறார்கள். இதுபோன்ற நிலையில் கல்வி பயிலும் குழந்தைகள் தீவிபத்து போன்றவற்றிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படவேண்டும்.
புதிதாக பள்ளிகள் தொடங்கும்போது அந்தப் பள்ளிக் கூடங்களில் போதுமான தீவிபத்து பாதுகாப்பு முறைகள் இருக்கின்றனவா? என்பதை சோதனையிடவேண்டும். அதன் பிறகே அந்தப் பள்ளிக் கூடங்கள் செயல்படுவதற்கு அனுமதியளிக்கவேண்டும். எனவே நீங்கள் (நீதிமன்றம் நியமித்த அதிகாரி, மத்திய அரசு வழக்கறிஞர்) பள்ளிகளில் தீ விபத்து நடைபெறாமல் இருப்பதற்கான நல்ல ஆலோசனைகளுடன் வரவேண்டும். அதன் பிறகு உரிய உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.
அப்போது, மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் கோன்சல்வெஸ், "தீவிபத்தால் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். இந்தக் கருத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை.
மேலும் நீதிபதிகள், "இந்த வழக்கின் மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறும்போது, நீங்கள் தயாரித்து வந்திருக்கும் குறிப்புகளை மறு ஆய்வு செய்து, பள்ளிகளில் தீ விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் உறுதிப்படுத்துங்கள்'' என்று உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வழக்கு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.