''மருத்துவ மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும்'' என்று இந்திய மருத்துவச் சங்க மாநில தலைவர் மருத்துவர் என். மோகன்தாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து இந்திய மருத்துவச் சங்க மாநில தலைவர் மருத்துவர் என்.மோகன்தாஸ், கவுரச் செயலாளர் மருத்துவர் எஸ்.ரவிசங்கர் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், கிராம மருத்துவமனைக்கு பயிற்சி மாணவர்கள் அனுப்ப பட இருப்பதை எதிர்த்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தினால் மக்கள் நலனை கருதி மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக மாணவர்களை அழைத்து சமூக தீர்வு காண வேண்டும்.
வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த புதிய மசோதா கொண்டுவரப் படவில்லை என்று மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதை கருத்தில் கொண்டு மாணவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும்.
கிராமப்புற மக்களுக்கு எதிரானவர்கள் மருத்துவர்கள் என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டாம். மருத்துவர்கள் என்றும் மக்கள் நலன் கருதி செயல்படுகின்றனர். தற்காலிக தீர்வுகள் அரசியல் ஆதாயம் என்று இல்லாமல் நிரந்தர தீர்வை காணுமாறு மத்திய அரசு, மாநில அரசு, மருத்துவ மாணவர்களை கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.