இந்தியாவை உளவு பார்கக் இலங்கைக்கு அமெரிக்கா நவீன ராடார் கருவியை வழங்கியுள்ளது. இதை தடுத்து நிறுத்த இந்தியா முன் வராவிட்டால் அதனுடைய விளைவுகள் நம்மை பாதிக்கும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பா தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள் அறிக்கையில், இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கு மிக நவீனமான ராடார் கருவிகளையும் நவீன ஆயுதங்களையும் அமெரிக்க அரசு அளித்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அமெரிக்கா அளித்துள்ள இந்த கொலைகருவிகள் ஈழத்தமிழர்களை மேலும் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு உதவுமே தவிர அங்கு அமைதியை ஏற்படுத்த ஒருபோதும் துணை நிற்காது.
அமெரிக்கா அளித்துள்ள அதி நவீன ராடார் கருவிகள் புலிகளின் நடமாட்டத்தை அறிந்துகொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை உளவறியவும் பயன்படும் என்பதை இந்திய அரசு உணர வேண்டும்.
இதற்கு எதிராக இந்திய அரசு கண்டனம் தெரிவித்து தடுத்து நிறுத்த முன்வராவிட்டால் அதனுடைய விளைவுகள் நம்மைப் பெருமளவுக்கு பாதிக்கும் என எச்சரிக்கிறேன். அமெரிக்காவின் இந்தப் போக்கிற்கு எதிராக குரல் எழுப்ப முன்வரும்படி அனைத்து கட்சிகளையும் வேண்டிக் கொள்கிறேன் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.