'' எப்போது தேர்தல் வருகிறதோ அப்போது நான் முதலமைச்சர் ஆவேன்'' என்று தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறினார்.
சென்னை கோயம்பேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை இன்று விஜயகாந்த் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவ கல்லூரி மாணவ - மாணவிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது. 5 ஆண்டு மருத்துவ படிப்பு முடித்த பிறகு ஒரு வருடம் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கிராமப்புற சேவை காலத்துக்கு சம்பளமும் கொடுக்க வேண்டும். இதற்கு தகுந்த மாதிரி மத்திய-மாநில அரசுகள் சட்டங்களை மாற்ற வேண்டும். நான் பலமுறை கூறியிருக்கிறேன். எப்போதும் தனி ஆளாகத்தான் செயல்படுவேன். யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். எனக்கு தொண்டர்கள் பாதுகாப்பு இருக்கிறது. காவல்துறையினரின் பாதுகாப்பு தேவையில்லை. எப்போது தேர்தல் வருகிறதோ அப்போது நான் முதலமைச்சர் ஆவேன் என்று விஜயகாந்த் கூறினார்.