மருத்துவப் படிப்பை ஓராண்டு நீட்டிக்காமல் இருந்தால் ஏற்கனவே உள்ள ஐந்தரை ஆண்டுகளில் ஓராண்டு கிராமப்புற சேவை செய்ய மாணவர்கள் தயாராக இருப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஓராண்டு கிராமப்புற மருத்துவ சேவை கட்டாயம் என்ற பெயரில் மருத்துவ பட்டப் படிப்பை ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்கும் வகையில் நடைமுறைப்படுத்த மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
கிராமப்புற சேவை செய்ய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், மருத்துவப் படிப்பு ஓராண்டு நீட்டிப்பு என்ற நிலை இல்லாமல், ஏற்கனவே உள்ள ஐந்தரை ஆண்டுகளில் ஓராண்டு கிராமப்புற சேவை செய்ய அவர்கள் தயாராக உள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வரும் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பல்வேறு காரணங்களால் தற்போதைய ஐந்தரை ஆண்டு மருத்துவ படிப்பையே குறித்த காலத்தில் பயின்று மருத்துவராக முடியாத நிலை இருக்கும்போது மேலும் ஓராண்டு மருத்துவப் படிப்பை நீட்டிப்பது கிராமப்புற மாணவர்களையும், ஏழ்மை நிலையில் உள்ள நகர்ப்புற மாணவர்களையும் பெரிதும் பாதிக்கும் என்பதால் மருத்துவப் பட்டப்படிப்பை ஓராண்டு நீட்டிக்கும் நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் விவசாயத் தேவைக்கு போதுமான யூரியா, டி.ஏ.பி. போன்ற அத்தியாவசிய உரங்கள் கிடைக்கச் செய்ய மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்ட 22 அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று அரசு வழக்கறிஞர்கள் மறுத்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.