திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து போக்குவரத்து தடைகள் ஏற்பட்டு வருவதால் பேருந்து பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நேற்று காலை ஏற்பட்ட போக்குவரத்து தடையால் மழையில் பத்து மணிநேரம் பேருந்து பயணிகள் தவித்தனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்கிருந்து திம்பம் மலைப்பாதை தொடங்குகிறது. இந்த மலைப்பாதை மொத்தம் இருபத்தி ஏழு கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இதில் ஆறு, எட்டு, இருபது, இருபத்தி ஏழு ஆகிய கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் ஆபத்தானவை. இது மிகவும் குறுகிய வளைவுகள். ஆகவே இந்த வழியாக பெரிய அதாவது டாரஸ் போன்ற லாரிகள் வருவது சிரமம்.
ஆனால் இந்த வழியாக இதுபோன்ற வாகனங்கள்தான் அதிகமாக வருகிறது. வரும் வாகனங்கள் அவ்வப்போது கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியமால் போக்குவரத்து தடை ஏற்படுவதால் இரவு, பகல் என பலமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் கர்நடாக, தமிழ்நாடு போக்குவரத்து தடைபடுவதுடன் பேருந்து பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
நேற்று காலை ஒன்பது மணிக்கு அதிகபாரம் ஏற்றிவந்த லாரி ஒன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி மலைப்பாதையில் வந்தது. அப்போது ஆறாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பமுடியாமல் ரோட்டின் குறுக்கே நின்றது. இதனால் லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இந்த வழியாக செல்லமுடியாமல் ஆங்காங்கே மலைப்பாதையிலேயே நிறுத்தப்பட்டது. கீழ் இருந்து மேல்நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் பண்ணாரியில் நிறுத்தப்பட்டது. மாலை ஆறு மணிக்குத்தான் போக்குவரத்து சீரானது. பத்து மணி நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் பலத்த மழை பெய்தது.
பேருந்து பயணிகள் கடும் மழையில் உணவு, தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். பலர் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் இருந்து பண்ணாரிக்கு நடந்தே வந்து சேர்ந்தனர்.
இது குறித்து இந்த வழியாக செல்லும் பேருந்து ஓட்டுநர் ரவிக்குமார் கூறியது, மலைப்பாதையில் எந்த அளவு எடை கொண்ட கனரக வாகனங்கள் வரவேண்டும் என ஆசனூர் மற்றும் பண்ணாரியில் அறிவிப்பு பலகை தேசிய நெடுஞ்சாலை சார்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை யாரும் நடைமுறைப்படுத்தாதே இதற்கு காரணம். ஆகவே அதிகாரிகள் இதை நடைமுறைப்படுத்தினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
நேற்று திம்பம் மலைப்பகுதியில் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதனால் வனத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.