''மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஜாதி வாரி அடிப்படையில் நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீட்டை பகிர்ந்தளிக்க வேண்டும்'' என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள அருந்ததியர் பிரிவினருக்கு மொத்த ஒதுக்கீடான 18 விழுக்காட்டில் இருந்து 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உள் ஒதுக்கீடாக பிரித்து வழங்க வேண்டும் என மார்க்சிய பொதுவுடைமை கட்சி கோரி வருகிறது.
அருந்ததியர் சமூகத்தின் மக்கள் தொகை மார்க்சியவாதிகளின் கணக்கின்படி 6 விழுக்காடே என்றால் மிச்சம் உள்ள 12 விழுக்காட்டில் பள்ளர் எத்தனை விழுக்காடு, பறையர் எத்தனை விழுக்காடு என்ற கேள்விகளும் அப்பிரிவு மக்களிடையே எழுவதற்கான வாய்ப்புகளும் உருவாகும் அல்லவா?
1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத்தான் அளவுகோலாக தனது அறிக்கையில் நீதிபதி மண்டல் கையாண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஓரளவுக்கு முன்னுக்குப்பின் வேறுபாடுகளை கொண்டிருக்குமே தவிர, தலைகீழாக மாறி இருக்க வாய்ப்பில்லை.
எனவே, ஒரு பிரிவினருக்கு மட்டுமே உள்ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையைவிட ஒவ்வொரு ஜாதிக்கும் தனி ஒதுக்கீடு வேண்டும் என்பதே பொருத்தமானதாகும். தாழ்த்தப்பட்டோரை மட்டுமின்றி, அனைத்து மக்களையும்வ ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.