தலித்துகளு‌க்கு இடஒதுக்கீடு பிரச்சினை : திருமாவளவனுக்கு மார்க்சிஸ்‌ட் விளக்கம்!

Webdunia

வியாழன், 8 நவம்பர் 2007 (12:24 IST)
தலித் மக்கள் இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக திருமாவளவனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விளக்கம் அளித்துள்ளது.

இது கு‌றி‌த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலித் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில் தமிழகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததி மக்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது மாநில மக்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதைக் குறிப்பிட்டு 2001-ல் மக்கள் கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 19 சதவீதமாக உயர்த்த வேண்டும். இது குறித்து மார்க்சிஸ்‌டுகள் வாய் திறக்காதது வியப்பாக உள்ளது என விமர்சித்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது நிலையை தெளிவுபடுத்திட விரும்புகிறது. தலித் மக்கள் மீதான தீண்டாமை கொடுமையை ஒழிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நீண்ட காலமாக இயக்கம் நடத்தி வருவதோடு, மாநிலத்தின் பல பகுதிகளில் நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, தலித், பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 12.6.2007 அன்று முதலமைச்சரை சந்தித்து தீண்டாமை ஒழிப்பு, தலித் மக்கள் கோரிக்கைக்கான மனுவை அளித்தது. அந்த மனுவிலும் தலித், பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டை 19 பிளஸ் 1 ஆக உயர்த்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியது. இந்த செய்தி பத்திரிகைகளிலும் வெளியாகி உள்ளது. இதை தொல்.திருமாவளவன் அறியாததுதான் வியப்பாக உள்ளது எ‌ன்று எ‌ன்.வரதராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்