சென்னையில் உள்ள விக்டோரியா அரங்கம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் இன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் பொதுச் செயலர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார்.
சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலையைக் கண்டித்துப் பேசிய திருமாவளவன், மத்திய அரசில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள், தமிழர் விரோதப் போக்கைக் கையாண்டு வருகின்றனர். எம்.கே.நாராயணன் போன்ற அதிகாரிகளை நீக்கிவிட்டு தமிழர்கள் மீது அக்கறையுள்ள அதிகாரிகளை வைத்து இலங்கை இனப்பிரச்சனை பற்றி சோனியா காந்தி விவாதிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்களின் வெறுப்புக்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என்றார்.
விடுதலைப் புலிகளின் போராளி சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு இரங்கல் தெரிவிப்பதோ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவளிப்பதோ இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது அல்ல. அப்படி தடைகள் விதிக்கப்பட்டாலும் தடையை மீறி தொடர்ந்து எங்கள் தார்மீக ஆதரவை வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப் பெருந்தகை, ஓவியர்கள் வீர சந்தானம், புகழேந்தி, இயக்குநர் வி.சி.குகநாதன், "தமிழ் முழக்கம்" சாகுல் அமீது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலையைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தலைமை வகித்தார்.
இதில் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா, வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களின் செயலர்கள், இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பஷீர் முகமது, வட தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், வேலூர், விழுப்புரம் செயலர்கள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.