தமிழ்நாட்டில் கூடுதலாக 22,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
படப்பையில் ரூ.400 கோடி செலவில் ஆரேவா நிறுவனம் உயர் மின்னழுத்த சுவிட்ச்கியர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு நிறுவனத்தின் தலைவர் பிலிப் கில்மோட் தலைமை வகித்தார். கிளாரின் லெக்சர் வரவேற்புரை ஆற்றினார். மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில், படப்பையில் அமைய உள்ள புதிய தொழிற்சாலை மூலம் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதில் உள்ளூர் ஆட்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய தொழிற்கொள்கை மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெறுவதற்கான விற்பனை வரி மானியம் தரப்படுகிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் மின் உற்பத்தி ஆகிறது. கூடுதலாக 22,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக 5 சிறிய துறைமுகங்கள் கட்டப்பட உள்ளன.
கடலூரில் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலையம் வர உள்ளது. அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற வெளிநாடுகள் தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.