தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்க இருக்கிறது. அவற்றில் உடனுக்குடன் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம்.
தமிழ்நாட்டில் 850 அரசு விரைவு பேருந்துகள் வழக்கமான நாட்களில் இயக்கப்படுகின்றன. இந்த அனைத்து பேருந்துகளிலும் தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து டிக்கெட்களும் கடந்த 20 நாட்களுக்கு முன்பாகவே விற்றுத் தீர்ந்து விட்டன.
இந்த நிலையில் உடனடியாக ஊருக்கு புறப்பட திட்டமிடும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து நேற்று முதல் நாளை (7ஆம் தேதி) வரை கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை திருச்சி, மதுரை, கும்பகோணம், சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கு மட்டும் முன்பதிவு கிடையாது. இதில் பயணம் செய்ய பேருந்து நிலையத்தில் இருக்கை ஒதுக்கீடு டோக்கன் ரூ.10 கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
சிறப்பு பேருந்துகள் இயக்குவது பற்றி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மா.ராமசுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் வழக்கமான நாட்களில் 850 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளியையொட்டி 100 பேருந்து கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
மேலும் சகோதர போக்குவரத்து கழகமான அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்து 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. நாளைவரை பேருந்துகள் அனைத்திலும் முன்பதிவு முடிந்து விட்டது. மேலும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். நாளை மட்டும் ஒரேநாளில் ரூ.1 கோடியே 10 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து 50 குளிர்சாதன சொகுசு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். அதில் 7 பேருந்துகள் டிசம்பருக்குள் வாங்கப்பட்டு இயக்கப்படும். அவை சேலம், திருச்சி, மதுரை, நாகர்கோவில் பகுதிகளுக்கு இயக்கப்படும். மேலும் புதிதாக 50 டீலக்ஸ் பேருந்துகள் டிசம்பர் மாதத்திற்குள் வாங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் தூங்கும் வசதியுடன் கூடிய சொகுசு பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்கும் என்று ராமசுப்பிரமணியன் கூறினார்.