சேலம் ரயில் கோட்டம் : முதலமைச்சர் கருணாநிதி துவக்கி வைத்தார்!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (19:10 IST)
தமிழ்நாட்டில் மேற்குப் பகுதி மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகளை நிர்வகிக்கும் சேலம் ரயில் கோட்டத்தை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் முதலமைச்சர் கருணாநிதி துவக்கி வைத்தார்!

சேலம் கிழக்கு ரயில்வே காலனி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்குத் துவங்கிய விழாவில் ரயில்வே துணை அமைச்சர் வேலு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.வி. தங்கபாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

சூரமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு சேலம் ரயில் கோட்டத்தை அமைக்க வேண்டும் என்று 1952 ஆம் ஆண்டு பெரியார் ஈ.வெ.ரா. விடுத்த கோரிக்கை 55 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது.

சேலம் ரயில் கோட்டத்தின் கீழ் 850 கி.மீ. தூர ரயில் பாதையும், 94 ரயில் நிலையங்களும் அடங்கும்.

பாலக்காடு ரயில் கோட்டத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு உட்பட்ட 623 கி.மீ. தூர ரயில் பாதையும், திருச்சி ரயில் கோட்டத்தில் இருந்து 135 கி.மீ. தூர ரயில் பாதையும் புதிதாக அமைக்கப்படவுள்ள 85 கி.மீ. தூர ரயில் பாதையும் நிர்வாகப் பகுதியாகக் கொண்டு சேலம் ரயில் கோட்டம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே இருந்த பாலக்காடு ரயில் கோட்டத்தில் தமிழ்நாட்டின் மதுரை கோட்டத்தில் இருந்து 79 கி.மி. தூர பாதை சேர்க்கப்பட்டு அது 588 கி.மீ. தூர ரயில் பாதையைக் கொண்ட நிர்வாகப் பகுதியாக இயங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்