முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பேசிய விவகாரத்தில் சட்டசபை உரிமைக்குழு அனுப்பிய தாக்கீதை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதியும், அவரது மகனும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலினும் தன்னை கொல்ல சதி செய்ததாக ஜெயலலிதா குற்றம்சாற்றி இருந்தார்.
இதையடுத்து கடந்த 18ஆம் தேதி சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தார். தன் மீதும், முதலமைச்சர் மீதும் ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது. தங்களது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியாகும். அவரது பேட்டி உரிமை மீறிய செயல் என்று கூறிய ஸ்டாலின், இதனை ஆய்ந்து முடிவெடுக்க உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அவைத் தலைவரை கேட்டுக் கொண்டார்.
இதில் மேலெழுந்த வாரியாக உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் இந்த பிரச்சனையை உரிமைக் குழுவுக்கு அனுப்புவதாக அவைத் தலைவர் ஆவுடையப்பன் அவையில் அறிவித்தார். இதையடுத்து சட்டசபையின் உரிமைக்குழு உறுப்பினர்கள் கூடி ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்தனர்.
இதன்படி அனுப்பப்பட்ட சம்மனில், ஜெயலலிதா மீது கொடுக்கப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்சனைக்கு விளக்கத்தை அவர் எழுத்து மூலமாக நவம்பர் 2ஆம் தேதி தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முதலமைச்சர் கருணாநிதி, அவரது மகனும் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது நான் சில குற்றச்சாட்டுகளை வெளியில் கூறி இருந்தேன். அது தொடர்பாக சட்டசபையில் விவாதித்துள்ளனர். என் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று எனக்கு உரிமை மீறல் குழு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பி உள்ளது. இதற்கு நாளைக்குள் (2ஆம் தேதி) விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த தாக்கீதிலும் ஒருநாள் மட்டுமே எனக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போதிய அளவிற்கு கால அவகாசம் வழங்கவில்லை. எனவே உரிமை மீறல் குழு அனுப்பிய தாக்கீதை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.