தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பயங்கரமான ஒரு கொலை முயற்சி தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார். அவரின் உடலில் நுரையீரல் வரை பாய்ந்துள்ள கத்தி இன்னும் ஒரு நூலிழை உள்ளே சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆனால் இந்த தாக்குதலுக்கு முன்பும், பின்பும் காவல் துறையினரின் செயல்பாட்டில் உள்ள கவனக்குறைவும், கடமை தவறிய போக்கும் எல்லாவற்றையும் விட பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.
நூற்றுக்கணக்கான அதிகாரிகளும், பல்லாயிரக்கணக்கான காவலர்களும் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் இருந்த பதட்டமான ஒரு மாவட்டத்தின் மையப்பகுதியில் இந்த கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. தாக்கப்பட்டவர் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர்.
காவல் துறையினர் முன்கூட்டியே அந்த பகுதி பதற்றம் நிறைந்த பகுதி என்பதை எடுத்து கூறி அவரது பயணத்தை தடுத்திருந்தால் இந்த தாக்குதலை தடுத்திருக்கலாம். இது தொடர்பாக 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.
ஆனால் ஒருவரிடமும் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. தாக்குதல், காவல் துறையினரின் கவனக்குறைவு, கடமை தவறிய போக்கு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் குறித்தும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. காவலர்களிடம் இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும். கடமை தவறிய அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.