அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்! சபையில் பங்கேற்கத் தடை!

Webdunia

வியாழன், 18 அக்டோபர் 2007 (14:28 IST)
ஜெயலலிதாவிற்கு எதிராக உரிமைப் பிரச்சனை கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அ.ி.ு.க. உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த கூட்டத் தொடர் முழுவதும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டனர்!

இன்று காலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸாடாலின் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க தலைவருமான ஜெயலலிதா, அவரின் உயிருக்கு ஆபத்து உண்டாக்குவதில் தி.மு.கவின் உயர்மட்ட தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அறிக்கை வெளியிட்டது தொடர்பாக உரிமைப் பிரச்சனை கொண்டு வந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க உறுப்பினர்கள் சபையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் கூண்டோடு வெளியேற்றப்ட்டனர். அத்துடன் இந்த கூட்டத் தொடர் முழுவதும் சபை நடவடிக்கையில் பங்கு கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டனர்.

இன்று சட்டசபை தொடங்கியதும் கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் உள்ளாச்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க தலைவருமான ஜெயலலிதா மீது உரிமைப் பிரச்சனை கொண்டு வர அனுமதி கோரினார்.

சபாநாயகர் அனுமதி கொடுத்தவுடன், ஸ்டாலின் உரிமை பிரச்சனை தொடர்பாக பேசும் போது, இவ்வாறு எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டுவது ஜெயலிலதாவிற்கு வாடிக்கையாகி விட்டது என்று கூறினார். உடனே அ.தி.மு.க உறுப்பினர்கள் எழுந்து ஸ்டாலினிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

சபாநாயகர் ஆவுடையப்பன் தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்களை அமைதி காக்கும் படி கேட்டுக் கொண்டார். அ.தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

இந்த அமளிகளுக்கு இடையே ஸ்டாலின் பேசும் போது, இதை ஜெயலலிதா சட்டபைக்கு வெளியே பேசி உள்ளார். அவர் நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கை சந்திக்க வேண்டும் என்று கூறியதுடன், இந்த அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் குரல், நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கைகள் மீதும், இந்த அறிக்கையை ஒளிபரப்பிய ஜெயா டி.வி மீதும் உரிமை பிரச்சனையை எழுப்பினார். இதை சபாநாயகர் உரிமை குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதை சபாநாயகர் உரிமை குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதாக தெரிவித்தவுடன், அ.தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷமிட்டனர். சிலர் சபாநாயகரின் இருக்கை அருகே அமர்ந்தனர். இதை தொடர்ந்து சபாநாயகர் எல்லா அ.தி.மு.க உறுப்பினர்களையும் சபையில் இருந்து வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஒரு அ.தி.மு.க உறுப்பினர் சபை காவலரின் தொப்பியை எடுத்து சபாநாயரை நோக்கி வீசினார்.

சபை காவலர்கள் தங்களை தாக்குவதாக கூறி, அ.தி.மு.க உறுப்பினர்கள் சபை காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். இதை தொடர்ந்து சபாநாயகர் அ.தி.மு.க உறுப்பினர்களை சட்டசபை வளாகத்தை விட்டு வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம் சபை சுமுகமாக நடைபெற எதிர்ககட்சி உறுப்பினர்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் படி கேட்டுக் கொண்டார்.

சபையின் தலைவரும் நிதி அமைச்சருமான க. அன்பழகன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்டவிதம், கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாகவும், ஸ்டாலின் உரிமை பிரச்சனையை கொண்டுவருவதை தடுக்கும் விதமாக இருப்பதாக கூறினார். அவர்கள் நேற்றும் தொடர்ந்து இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதே மாதிரி நாளையும் நடந்து கொள்வதற்கு வாய்ப்பு உண்டு என்று கூறி, அவை விதிகள் 121 ( 2) ன் கீழ் இந்த கூட்டத் தொடர் முழுவதும் அ.தி.மு.க உறுப்பினர்களை
சபை நடவடிக்கையில் கலந்து கொள்ள தடை விதிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது.

சபாநாயகர் மீது அவை காவலரின் தொப்பியை எடுத்து வீசிய அ.தி.மு.க உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டதற்கு, சபாநாயகர் இது மோசமான நடவடிக்கை, இனி எதிர்காலத்தில் அவர்கள் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் பதிலளித்தார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் மீது தொப்பியை வீசிய உறுப்பினரை டி.வி பதிவுகளை பார்த்து அடையாளம் கண்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்