ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 180 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர், உதவியாளரை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்துவதாக சங்ககிரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் ஆய்வாளர் அண்ணாமலை உள்ளிட்ட காவலர்கள் சங்ககிரிபவானி முதன்மை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பழையபட்டிபுதுரை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாபு (31), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த உதவியாளர் மாரி (27) கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்ட ரேஷன் அரிசி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது. லாரியுடன் 70 கிலோ எடையில் 180 மூடை ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. கைதான நபர்களிடம் சேலம் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.