தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமென அரசு விரைவு போக்குவரத்து கழகநிர்வாக இயக்குனர் ராம சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீபாவளியை யொட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், திருநெல்வேலி, கோவை, திருச்சி, மதுரை, சேலம் போன்ற ஊர்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேவை ஏற்பட்டால் இதர போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளையும் இயக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
மேலும், தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 188 வழித்தடங்களில் 850 பேருந்துகளை விரைவு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. நவம்பர் 5,6,7,8,9 ஆகிய தேதிகளில் அனைத்துப் பேருந்துகளும் நிரம்பி விட்டன.
ஆன் லைன் மூலமாக பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் மிக எளிதாக எந்த இடத்திற்கும் செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது. தினமும் 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் பேர் வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்கிறார்கள்.
பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்கனவே உள்ள 4 கவுண்டர்களுடன் கூடுதலாக 2 கவுண்டர் திறக்கப்பட்டுள்ளன. தாம்பரத்திலும் ஒரு சிறப்பு முன்பதிவு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது 390 `அல்ட்ரா' டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அடுத்த மாத இறுதிக்குள் மேலும் 50 ஏ.சி. பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். இவைதவிர 52 புதிய அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளை வாங்க அரசு நிதி வழங்கியுள்ளது என்று ராம சுப்பிரமணியம் தெரிவித்தார்.