லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது!

Webdunia

புதன், 17 அக்டோபர் 2007 (13:35 IST)
லஞ்சம் வாங்கிய காவல் துறை உயர் அதிகாரியை மதுரை லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் நேற்று இரவு கைது செய்தனர்.

மதுரை மாநகர காவல் சரகத்திற்கு உட்பட்ட தல்லாக்குளம் காவல் சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் விவேகானந்தன், தனது சகோதரி வீட்டில் வைத்து 15,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது மதுரை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

மதுரையில் தல்லாக்குளம் பகுதியில் பழைய வாகனங்களை விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் காதர். இவரிடமிருந்து ஒருவர் வாகனம் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். அதற்கான தொகை செலுத்தாமல் காலம் கடத்தி வந்த நிலையில், அவரிடமிருந்து தான் விற்ற வாகனத்தை பறிமுதல் செய்ய காதர், மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தை அணுகினார்.

இது தொடர்பாக சட்டம் - ஒழுங்கு உதவி ஆணையர் விவேகானந்தனை சந்தித்து காதர் புகார் தெரிவித்தபோது, அவரின் புகார் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மேற்கண்ட நபரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்ய விவேகானந்தன் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த காதர் இது தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறைக் கண்காணிப்பாளர் பால சண்முகத்திடம் புகார் செய்துள்ளார். இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட பால சண்முகம்,

இந்நிலையில் தனது சகோதரி வீட்டில் வைத்து விவேகானந்தன் காதரிடம் இருந்து 15,000 ரூபாயை பெற்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் குலோத்துங்க பாண்டியன் தலைமையிலான சிறப்புப் படையினர் கைது செய்தனர்.

இச்சம்பவம் மதுரை மாநகர காவல்துறையினரிடையே பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்