அறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த மாதம் 15 ஆம் தேதி கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது. இந்த தொலைக்காட்சியில் வரும் மெகா தொடர்கள் நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடபட்டுள்ளது. இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி வழங்கும் "தமிழருவி'' என்னும் கவிதை முழுக்கம் ஒளிபரப்பப்படுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி கவிதை பாடுகிறார். அதோடு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் விதம் விதமாக வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி மியூசிக் சேனல் மற்றும் நியூஸ் சேனல் என்ற 2 புதிய சேனல்களை தொடங்க கலைஞர் தொலைக்காட்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சேனல் குறித்து கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார் கூறுகையில், மியூசிக் சேனலுக்கு "இசை அருவி'' என பெயரிடப்பட்டுள்ளது. நியூஸ் சேனலுக்கு "கலைஞர் நியூஸ்'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரு சேனல்களும் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் என்றார்.
"இசை அருவி'' சேனல் அடுத்த மாதம் ஒளிபரப்பு தொடங்குகிறது. இந்த சேனலில் 24 மணி நேரமும் பாடல்கள் ஒளிபரப்பாகும். அனைத்து வகை சினிமா பாடல்களையும் நேயர்கள் கண்டு மகிழலாம் என்று சரத்குமார் கூறினார்.
நேயர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் நேயர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்கள் ஒளிபரப்பாகும். இது தவிர பழைய பாடல்கள் தொகுப்பும் காட்டப்படும். செய்தி சேனலான "கலைஞர் நியூஸ்'' டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பைத் தொடங்கிறது. இதில் 24 மணி நேரமும் செய்திகள் வாசிக்கப்படும் என கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் தெரிவித்தார்.
இதில் அனைத்து வகை செய்திகளும் இடம்பெறுகிறது. இடை இடையே பல தலைப்புகளில் டாக் ஷோ நடத்தப்படும். இந்த சேனலுக்கு என தனி நிபுணர் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார் கூறினார்.