சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 30ஆம் தேதி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் கருணாநிதி அஞ்சலி செலுத்துவார் என்று அமைச்சர் சுப. தங்கவேலன் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு தேவர் நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் மதுரை செல்லும் அவர், 31ஆம் தேதி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே அமைக்கப்பட்டு உள்ள மருதுபாண்டியர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார் என மேலும் அமைச்சர் கூறினார்.
தேவர் வாழ்ந்த வீடு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அவரது நினைவிடமும் சீரமைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் அணையா விளக்கு, முடி காணிக்கை செலுத்தும் கட்டிடம், நிரந்தர புகைப்பட கண்காட்சி கூடம், முளைப்பாரி, பால்குடம் அறை, நூலகம் போன்றவை கட்டப்பட்டு வருகின்றன என அமைச்சர் சுப.தங்கவேலன் தெரிவித்தார்.
அதே போல புதிய கழிப்பறைகள், குடிநீர்வசதி, முடி இறக்கும் கட்டிடம் போன்றவையும் கட்டப்பட்டு உள்ளன. அங்குள்ள ஆதிதிராவிட மக்களுக்கு புதிதாக 75 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த பணிகள் வரும் 15ஆம் தேதிக்குள் முடிவடைந்து விடும். நூற்றாண்டு தோரண வாயில் வரும் 20ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று அமைச்சர் கூறினார்.