கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று 42 பேருக்கு தண்டனை அறிவிக்கப்படுவதால் நீதிமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 158 பேர் குற்றவாளிகள் என்று தனி நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து இருந்தது. இதில் கூட்டு சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத மதானி உள்பட 8 பேருக்கு கடந்த 28ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் 41 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 3 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள்வரை ஏக காலத்தில் சிறை தண்டனை அனுபவிக்கும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 41 பேரும் 9 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதால் தண்டனை காலம் முடிந்து 41 பேரும் விடுதலையானார்கள்.
கூட்டு சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத மீதமுள்ள 42 கைதிகளுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது. காலை முதல் மாலைவரை தனித்தனியாக ஒவ்வொருவரையும் அழைத்து தண்டனை விவரம் தெரிவிக்கப்படுகிறது.
இதையொட்டி கோவை தனி நீதிமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நீதிமன்றம் முடிவடையும் வரை அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டு சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள அல்-உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உள்பட 75 பேருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் தேதி குறித்து வரும் 10ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்று நீதிபதி உத்திராபதி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இவர்களுக்கான தண்டனை குறித்த வழக்கறிஞர்கள் வாதம் கடந்த 3ஆம் தேதியுடன் நிறைவு அடைந்தது. ரம்ஜான் முடிந்த பின்னர் பாஷா, அன்சாரிக்கு தண்டனை குறித்த தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.