மதுரை சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கையை சேர்ந்த ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.
இலங்கையின் நெகம்போ என்ற பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் படகு ஒன்றில் கடந்த ஜுன் மாதம் கடல் எல்லையை தாண்டி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்தனர். அவர்களை தூத்துக்குடி காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 4 பேரையும் ஜாமீன் எடுக்க படகு உரிமையாளர் வருணகுல சூர்யா என்பவர் சென்னையில் உள்ள இலங்கை தூதரக துணை ஆணையரை சந்தித்து சிறையில் உள்ள 4 பேரை ஜாமீனில் எடுக்கவும், படகை மீட்கவும் வந்துள்ளதாகவும் கூறி, அதற்கான அனுமதி கடிதத்தை பெற்றார்.
இந்த கடிதத்துடன் நேற்று காலை மதுரை மத்திய சிறைக்கு வருணகுல சூர்யா வந்தார். 4 பேரையும் பார்ப்பதற்கான அனுமதி கடிதத்தை அவர் சிறை அதிகாரியிடம் கொடுத்தார். பிற்பகல் 3 மணிக்கு 4 பேரையும் பார்த்துச் செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் அவர் மத்திய சிறைக்கு வந்தார். பார்வையாளர் வழியில் சிறைக்குள் செல்லாமல், குற்றவாளிகள் அழைத்து செல்லப்படும் மெயின் கேட் வழியாக அவர் சிறைக்குள் நுழைய முயன்றார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தேவராஜன் என்பவர், சூர்யாவை தடுத்து நிறுத்தினார். இந்த வழியாக செல்லக்கூடாது என்று எச்சரித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென தேவராஜன் கையில் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். ரக கைத்துப்பாக்கியை சூர்யா பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதில் காவலர் தேவராஜன் தற்காப்புக்காக அவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிகிறது. இதில் குண்டுபாய்ந்து சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மாநகர காவல்துறை ஆணையர் நந்தபாலன், துணை ஆணையர் ராமராஜன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஆர்.டி.ஓ. நாராயணமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.