நடைபாதைகளில் பட்டாசு விற்க அனுமதிக்க கூடாது: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்

Webdunia

வெள்ளி, 5 அக்டோபர் 2007 (11:23 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபாதை மற்றும் தெரு ஓரங்களில் பட்டாசுகள் விற்க அனுமதிக்க கூடாது என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் கருத்து தெரிவித்துள்ளது.

பட்டாசுகளை நடைபாதை மற்றும் தெரு ஓரங்களில் விற்க அனுமதிக்க கூடாது என்று பல்வேறு அமைப்பினர் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌‌த்‌தி‌ல் ஏ‌ற்கனவே வழக்கு தொடர்ந்தனர். ''வெளிமாநிலங்களில், பல பெரிய நகரங்களில் இருப்பது போல திறந்தவெளி இடங்களில் தான் பட்டாசுகளை வைத்து விற்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் உள்ள இடங்களில் பட்டாசுகளை விற்க லைசென்சு வழங்க கூடாது'' எ‌ன்று மனுவில் கூறியிருந்தனர்.

இதேபோ‌ல் வெடிமருந்து சட்டத்தின் கீழ் பட்டாசு விற்க அனுமதி கேட்கும் இடங்களை பார்வையிட்ட பிறகுதான், லைசென்சு வழங்க வேண்டும் என்றும், அப்படி வழங்கினால் தான் விபத்துக்களை தவிர்க்க முடியும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் விசாரித்தனர். சென்னை மாநகராட்சி ஆணையரும், காவ‌ல்துறை‌யினரும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள். சென்னையில் பட்டாசு விற்க லைசென்சு வழங்குவது குறித்து சில நெறிமுறைகளை வகுத்து ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தெரிவித்தனர்.

நடைபாதைகளிலும், தெரு ஓரங்களிலும் பட்டாசுகளை விற்க அனுமதிக்க கூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சில்லரை வியாபாரத்திற்காக நிரந்தரமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஆயிரம் கிலோ எடையுள்ள பட்டாசுகள் மட்டும் தான் வைத்து விற்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பான தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்