சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்றக்கோரி நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
சேதுசமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்றக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து கட்சி தலைவர்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிட நம்முடைய உணர்வுகளை ஒட்டுமொத்த உண்மைத் தமிழர்கள் ஒரே குரலில் எடுத்துச் சொல்லவேண்டும். கூவும் சேவலை கூடைபோட்டு கவிழ்த்தாலும், அது கூவியே தீரும். அப்படித்தான் இந்த திட்டத்தை யார் தடுக்க நினைத்தாலும் அது நிறைவேறும். இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அனைத்து கட்சிகளும் சேர்ந்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று ஜனநாயக முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்திட்டம் நிறைவேறும்போது, தமிழகத்திற்கு நேரிடையாக உள்ளே நுழைய முடியாமல் பல கடல்மைல்கள் சுற்றி வரும் கப்பல்கள் சேது சமுத்திர கால்வாய்கள் வழியாக எளிதில் வரமுடியும். இதனால் காலவிரயமும், பொருட்செலவும் குறையும். தமிழகத்தின் வர்த்தகம் பெருகும்.
குறிப்பாக தூத்துக்குடி, அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வறுமையின் பிடியிலிருந்து மீண்டு, வளர்ச்சியடைய இத்திட்டம் பயன்படும். சேது சமுத்திர கால்வாயினை விரைவாக அமைத்திட வேண்டும், என்று பொது நோக்கு சிந்தனையோடு தி.மு.க. தலைமையிலான கூட்டணி நாளை நடத்த இருக்கும் பொது வேலை நிறுத்தத்திற்கு புதிய நீதிக்கட்சி முழு ஆதரவு தரும் என்று கூறியுள்ளார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கப்பேரவை குப்புசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக கூட்டணியிலுள்ள கட்சிகள் எடுத்த முடிவிற்கிணங்க ஒட்டு மொத்த தொழிலாளர்கள் வர்க்கத்தின் ஆதரவினை தெரிவிக்கும் வகையில் நடைபெறுகின்ற வேலை நிறுத்தத்தில் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரைப்பாடி டிப்பர் லாரி உரிமையாளர்கள் பொது நலச்சங்க தலைவர் எஸ்.எஸ். பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், `முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதால் நாளை லாரிகள் ஓடாது' என்று கூறியுள்ளார்
இதே போல், வன்னிய மாணவர் நலக்கழகம் தலைவர் சாம்பசிவம், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன், தமிழக ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் முருகன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் தலைவர் சூரிய மூர்த்தி, தமிழ்நாடு வேன் உரிமையாளர் சங்கம் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.