அண்ணா பிறந்த நாள் 190 ஆயுள் கைதிகள் விடுதலை!
Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (18:10 IST)
அண்ணா பிறந்த நாளையொட்டி வரும் 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளில் இருந்து 190 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்ளன. இவற்றில் ஆயுள் தண்டனை கைதிகள் 3,500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் பூர்த்தியான நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, அனைத்து மத்திய சிறைகளிலும் அதற்கான பட்டியலை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அரசு கேட்டது. ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டில்கள் சென்னை சிறைத் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அவை சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பேரில் தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய சிறைகளில் இருந்தும் 10 ஆண்டுகள் பூர்த்தி செய்த ஆயுள் தண்டனை நன்னடத்தை கைதிகள் 190 பேர் நாளை (15ஆம் தேதி) விடுதலை செய்யப்படுகின்றனர்.
அதன்படி சென்னை புழல் சிறையிலிருந்து 8 பேர், புழல் பெண்கள் சிறையிலிருந்து 2, கடலூரில் 20, சேலத்தில் 3, மதுரையில் 21, திருச்சியில் 28, திருச்சி பெண்கள் சிறையிலிருந்து ஒருவரும், வேலூரில் இருந்து 19, வேலூர் பெண்கள் சிறையில் இருந்து 2, பாளையங்கோட்டையில் இருந்து 38, கோவையிலிருந்து 48 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.