ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட தபால் நிலையங்களில் "ரெவின்யூ' ஸ்டாம்ப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் மாத ஊதியம் பெறும்போது ரூ.1 மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்திட வேண்டும். அதேபோல் தனியார் நிதி நிறுவனங்கள், பதிவாளர் அலுவலகம், வங்கிகளிலும் ரெவின்யூ ஸ்டாம்ப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் நகரம், கிராமப் புறங்கள் உட்பட அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. சில மாதங்களாக ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையம் உட்பட சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமப்புற தபால் நிலையங்களிலும் ரெவின்யூ ஸ்டாம்பிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் தனியார் கடைகளில் ரெவின்யூ ஸ்டாம்ப் எவ்வித தட்டுப்பாடுமின்றி எளிதாக கிடைக்கிறது. தபால் நிலையங்களில் நிலவும் தட்டுப்பாடை பயன்படுத்திக் கொள்ளும் கடைக்காரர்கள் ரூ.1க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய ரெவின்யூ ஸ்டாம்பை நான்கு மடங்கு விலை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்' என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ரூ.1க்கு விற்கப்பட வேண்டிய ரெவின்யூ ஸ்டாம்ப் ரூ. 5 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்திற்கு தபால் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களே காரணம். வணிக நிறுவனத்தாரிடம் கிடைக்கும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தபால் நிலையங்களுக்கு வரும் ரெவின்யூ ஸ்டாம்புகளை மொத்தமாக விற்பனை செய்துவிடுகின்றனர் எனவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.