ஈரோடு பகுதியில் அழுகும் குச்சி கிழங்கு

Webdunia

சனி, 8 செப்டம்பர் 2007 (11:14 IST)
தமிழகம் முழுவதும் சேகஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஈரோடு மாவட்டத்தில் பயிரிட்டுள்ள சுமார் ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட மரவள்ளிக் கிழங்கு அழுகத் துவங்கி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சுமார் இருபத்தி ஐந்தாயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு அறுவடை துவங்கியுள்ளது.

ஜவ்வரிசி, சேகோ தயாரிப்பில் நச்சுத்தன்மை அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதை தொடர்ந்து, உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

வெளி மார்க்கெட்டில் மூடைக்கு ரூ. 300 வரை விலை குறைத்து விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

உற்பத்தியாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதால் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலையில் பணம் பட்டுவாடா செய்ய முடியவில்லை.

சேகோ சர்வின் தேவையற்ற பரிசோதனை முறைகளை நீக்கவும், உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் படி பரிசோதனை கையாள வேண்டியும், தமிழகம் முழுவதும் உள்ள சேகோ ஆலை உரிமையாளர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அறுவடை செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கு வீணாக அழுகுகிறது. வியாபாரிகள் வராததால், பல விவசாயிகள் அறுவடையை நிறுத்தி வைத்துள்ளனர்.

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணி முடித்து, நெல் நடவு துவக்க வேண்டிய தருணம். பெரும்பாலான விவசாயிகள் நெல் நாற்று விட்டுள்ளனர்.

ஆனால், மரவள்ளிக்கிழங்கு அறுவடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நெல் சாகுபடியை துவக்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு தெரிவித்தாவது:

ஈரோடு மாவட்டத்தில் சேகோ ஆலைகள் எண்ணிக்கை குறைவே. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 210 சேகோ ஆலைகள் உள்ளது. அங்குதான் மரவள்ளி கிழங்கு கொண்டு செல்லப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு ஏற்கனவே அறுவடை பருவத்தை அடைந்து விட்டது. ஆகஸ்ட் 15 ம் தேதி கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வாய்க்கால் ஓரத்தில் உள்ள மரவள்ளி கிழங்கு பயிராகியுள்ள நிலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கிழங்குகள் அழுகுகின்றன. ஆலை அதிபர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருபத்தி ஐந்து ஆலைகள் போராட்டத்தில் இருந்து விலகி உற்பத்தியை தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்