சேலம் ரயில் கோட்டம் : லாலு பிரசாத் உறுதி; ரயில் மறியல் கைவிடப்பட்டது

Webdunia

சனி, 25 ஆகஸ்ட் 2007 (11:31 IST)
சேலம் ரயில் கோட்டம் நிச்சயம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உறுதி அளித்ததை அடுத்து ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

சேலம் ரயில் கோட்டம் அமைக்கப்படுவது குறித்து உறுதி அளிக்கப்பட வேண்டும் என்று கோரி திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இன்று அதிகாலை முதல் ரயில் மறியலில் ஈடுபட்டன.

திருப்பூர், கோவை, போத்தனூர் ரயில் நிலையங்களில் நடந்த மறியலால் கேரளாவிற்குச் செல்லும் ரயில்களும், கேரளாவில் இருந்து டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களும் மறிக்கப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்கள் பல நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சேலம் ரயில் கோட்டம் அமைக்கப்படுவது உறுதி என்றும், எனவே ரயில் மறியலை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இத்தகவலை சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறிய தமிழக அமைச்சரும், சேலம் மாவட்ட திமுக செயலருமான வீரபாண்டி ஆறுமுகம், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அளித்த உறுதி மொழியை ஏற்று ரயில் நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூறினார்.

ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டதை அடுத்து ரயில் போக்குவரத்து சீரானது.

வெப்துனியாவைப் படிக்கவும்